ஒரு படத்தில் கிணற்றைக் காணோம் என்று வடிவேலு புகார் அளித்தது போல இங்கே ஒருவர் ஏரி வாய்க்காலையும் ஊறல் வாய்க்கால் கரையையும் காணோம் என்று முதலமைச்சருக்கு புகார் அளித்திருக்கிறார்.முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவின் நகலை – உள்துறை செயலாளர் உள்ளிட்ட தொடர்புடைய துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறையின் விழுப்புரம் மண்டல தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர், ஆகியோருக்கும் அனுப்பி இருக்கிறார்
வாசுகி லட்சுமணன் தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் ஏமாப்பூர் கிராமத்தில் தனது தந்தையின் நிலம் என்ற உணர்வுப் பூர்வமான காரணத்தினால், வட்டிக்குக் கடன் பெற்று ஒரு நிலத்தை வாங்கினார்.ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் அதை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். காரணம் கண்ணாரம்பட்டு ஊறல் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான பொது வண்டி பாதை தனது நிலத்தில் வருவதாகக் கூறி ஏமப்பூரைச் சேர்ந்த குப்பன் & முருகன் சகோதரர்கள் வழிவிடாமல் தடுத்தனர்.
இதனால் வாசுகி லட்சுமணன் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதனை அறிந்த உடன் நிலைமையை சிக்கலாக வேண்டும் என்பதற்காகவே குப்பன் முருகன் சகோதரர்களே அவசர அவசரமாக வண்டிப் பாதையின் குறுக்கே தகரக் கொட்டகை அமைத்து விட்டனர்.வாசகி லட்சுமணன் புகார் மனு அளித்து வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளர் உள்ளிட்டவரிடம் முறையிட்ட பின், ஏழு மாதங்கள் கழித்து கடந்த 4.11.2023 அன்று ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக அழைத்தார்கள்.

ஆனால் யாருக்கோ அல்லது எதற்கு ஏவலாளி போல செயல்பட்ட திருவெண்ணைநல்லூர் எஸ்ஐ மணிகண்டன், கடந்த மாதம் அளந்து ஆக்கிரமிப்பு எதுவரை வருகிறது என்று நீல அளவையாளர் தயாரித்து கொடுத்த ஆவணங்கள் அனைத்தையும் உதாசீனப்படுத்தி வாசுகி லட்சுமணனை நாயை விரட்டுவதைப் போல கேவலமாக நடத்தி அசிங்கப்படுத்தியதோடு, காரணமே சொல்லாமல் உடனடியாக காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று அழைத்து அவரையும் அவர் கணவர், உடனிருந்த நண்பர்களையும் நீண்ட நேரம் காத்திருக்கச் செய்து கடைசியில் எந்த ஆதாரமும் இன்றி யாரோ அளித்த பொய் புகாருக்காக அப்போதே விசாரிக்க வேண்டும் என்று அவர்களை திசை திருப்பி இருக்கிறார். அவர்கள் காவல் நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் புதிதாக அளந்ததில் ஆக்கிரமிப்பு இல்லை என்றும் சொல்லச் செய்திருக்கிறார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாசுகி லட்சுமணன் என்ன நடந்திருக்கிறது என்று ஆராய்ந்த போது நூற்றாண்டுகளுக்கு முன்பு வாய்க்கால்கள் அமைத்த போது பிரச்சனைக்குரிய நிலத்திலிருந்து கையகப்படுத்தப்பட்ட கண்ணாரம்பட்டு ஊறல் வாய்க்காலின் தென்கரையையும், அதே நிலத்தின் மத்தியில் அமைந்துள்ள 80 அடி அகலமுடைய கண்ணாரம்பட்டு ஏரி வாய்க்காலையும் அந்த நிலத்தின் வரைபடத்தில் குறிப்பிடப்படவே இல்லை அல்லது உள்நோக்கத்தோடு யாரோ நீக்கி இருக்கிறார்கள் என்பதை அறிந்தார்.
அதனால் இரண்டு வாய்க்கால்களும் தனக்கு சொந்தமானவை என்று நடக்கக்கூட வழி விடாமல் தகராறு செய்யும் குப்பன் முருகன் சகோதரர்களின் நிலத்தில் செல்லும் பொதுப்பணிக்கு துறைக்கு சொந்தமான வாய்க்கால்களை நிலப்படத்தில் குறிப்பிட்டு ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பியிருக்கிறார். அதோடு தன்னை இழிவு படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய எஸ்.ஐ. மணிகண்டன், தன்னிடம் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் எதிரிக்கு சாதகமாக நடந்து கொண்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை கடைநிலை ஊழியர்கள், இரட்டை அர்த்தத்தில் அசிங்கமாகப் பேசி மன உளைச்சலை ஏற்படுத்திய வேளாண் துறை ஊழியர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இருக்கிறார்.