அதிமுக ஆட்சியின்போது நடந்த மணல் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி முறைகேடுகள் மற்றும் எத்தனை மெட்ரிக் டன் மணல் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி பெரிய அளவில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.அதேநேரம், திருச்சி மற்றும் வேலூரில் இயங்கி வரும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக பிரபல தொழிலதிபர்களான புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகியோர் உள்ளனர். மணல் ஒப்பந்த குவாரிகளில் வரும் வருமானத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனை முடிவில், மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அதிமுக ஆட்சியின் போது மணல் குவாரிகள் நடந்த மாவட்டங்களில் பணியாற்றிய 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோருக்கு மோசடி தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த சம்மனை தொடர்ந்து நேற்று நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் அதிமுக ஆட்சியின்போது, மணல் குவாரிகள் ஒப்பந்தம் கோரப்பட்ட டெண்டர்கள் விபரங்கள், எத்தனை இடங்களில் மணல் குவாரி டெண்டர் விடப்பட்டது. அந்த மணல் குவாரிகள் மூலம் எத்தனை மெட்ரிக் டன் மணல் விற்பனை செய்யப்பட்டது, அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் அள்ளப்பட்டதா? சோதனையின்போது மணல் குவாரி அதிபர்கள் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு விபரங்களை நேரடியாக வைத்து சரமாரியாக கேள்விகள் கேட்டப்பட்டது.
அப்போது நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அதற்கான விளக்கங்கள் அளித்தாக கூறப்படுகிறது. இந்த விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. விசாரணையின் விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட மறுத்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து சம்மன் அனுப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்த நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.