தேனி மாவட்டத்தில் வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு முக்கிய நீராக உள்ளது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் அணையில் இருந்து முதல் மற்றும் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனை தொடர்ந்து வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த 4-ந்தேதி வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டிய போது கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதன் பிறகு 8-ந்தேதி அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாத பெய்த கனமழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.31 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2596 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 5908 மி.கன அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர்கள் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று காலை முல்லைப்பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் தண்ணீர் வெளியேறிய இடத்தில் விவசாயிகள் மலர்களைத்தூவி வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர்கள் ஷஜீவனா (தேனி), சங்கீதா (மதுரை), பூங்கொடி (திண்டுக்கல்), எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன்,வெங்கடேஷ், சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.