தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான கடையில் அருகே உள்ள மதுபான பாரில் கடை திறப்பதற்கு முன்பே மது வாங்கி குடித்த விவேக் மற்றும் குப்புசாமி என்ற இருவர் உயிரிழந்தனர். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்துள்ளது. இதனையடுத்து அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாரின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், விவேக்கின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விவாகரத்தான அவரது மனைவி ரேகா, சயனைடு பயன்படுத்தும் நகை பட்டறை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் எந்த தடையும் கிடைக்காமல் வழக்கு அடுத்த கட்ட நிலைக்கு செல்லாமல் உள்ளது.
காவல்துறையினரின் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நகை பட்டறை கடைகளை அடைத்து நகை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உயிரிழந்த விவேக்கின் மனைவி ரேகா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனக்கும் – விவேக்கிற்க்கும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டது. கடந்த ஓராண்டுக்கு மேல் அவருக்கும் – எனக்கும் எந்த தொடர்பு இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலையில் அவரின் மரணத்திற்கு குடும்ப பிரச்சினை தான் காரணம் என காவல்துறையினர் கூறுகின்றனர். மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்றால் விவேக் ஒராண்டுக்கு முன்பே உயிரிழந்திருப்பார். ஆனால் காவல்துறையினர் தொடர்ந்து தொல்லை தருவதாகவும், விசாரணை என்ற பெயரில் தன்னையும் தனது ஒரு குடும்பத்தாரையும் மிகவும் தரகுறைவாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார். மேலும் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் தங்களுக்கு தொல்லை கொடுத்தால் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.