தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாவட்டங்கள் தோறும் நேரில் சென்று ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட பணிகளை வரும் 25ம் தேதி நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
விழுப்புரத்தில், 3 மாவட்டங்களுக்கான ஆய்வுப் பணி நடைபெற உள்ளது. வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தருகிறார்.

அங்கு, விழுப்புரம், கடலுார் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதை தொடர்ந்து வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்களிடம் தனித்தனியாக கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்கிறார்.

பிறகு விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் தங்கும் முதல்வர், மறுநாள் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு மீண்டும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 3 மாவட்ட முக்கிய அதிகாரிகளுடன், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து, ஆலோசனை நடத்த உள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அதனையொட்டி, நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை துாய்மைப்படுத்தி புதுப்பிக்கும் பணி துவங்கியது. 25ம் தேதி முதல்வர் வருகையும், ஆய்வுக் கூட்டங்களும் நடைபெறுவதால் இப்பணிகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.