முகமூடி கொள்ளையர்கள்போல் முகத்தை மூடிக் கொண்டு , டாஸ்மாக் அருகே வசூல் வேட்டையில் இறங்கிய இரண்டு பெண்கள் , ஆச்சரியத்தில் ஆழ்ந்த மது பிரியர்கள் , சமூக ஊடகங்களில் அதிக பகிரப்படும் காணொளி காட்சி .
தங்களை பெண்போலீஸார் என்று மிரட்டிய இரண்டு அடையாளம் தெரியாத பெண்மணிகள் , சைடு டிஷ் மற்றும் தண்ணீர் பாட்டில் விற்கும் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு அடாவடியில் ஈடுபட்டனர் .
இதனைப் பார்த்த மதுபிரியர்கள் , இந்த காட்சிகளை தங்களது அலைப்பேசியில் பதிவு செய்து , வாட்சப் உள்ளிட்ட செயலிகளில் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர் .
விழுப்புரம் , தாலுகா காவல் நிலைய எல்லைக்குப்பட்ட , ஜானகிபுரத்தில் , இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது . இந்த கடைகளுக்குப் பார் உரிமம் இல்லாத நிலையில் , மதுபிரியர்களுக்கு வசதியாக , 20 கும் மேற்பட்ட சாலையோர சைடு டிஷ் கடைகள் இயங்கி வருகின்றது . இதை பெரும்பாலும் , ஜானகிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த , இளைஞர்கள் மற்றும் முதியோர்களே நடத்தி வருகின்றனர் .
வழக்கமாகச் சீருடை அணைந்த ஆண் காவலர்கள் மட்டுமே மாமூல் வசூலில் ஈடுபட்டுவந்த நிலையில் , தற்போது புதிதாக , முகமூடி கொள்ளையர்களைப் போல , முகத்தில் மாஸ்க் , ஷால் உள்ளிட்டவற்றைச் சுற்றிக் கொண்டு , தங்களை பெண் காவல் அதிகாரிகள் என கூறிக்கொண்டு , வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர் .
இது குறித்து தாலுகா காவல் நிலைய அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது , அவர் மாமூல் வாங்குவதாக வந்த குற்றச்சாட்டை மறுத்தார் . மேலும் அந்த இரண்டு பெண்களும் தங்களது காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தார் .

மேலும் ‘தி நியூஸ் கலெக்ட்’ மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டபோது , “ஸ்கூட்டரில் வந்த அந்த இரண்டு பெண்களும் , கலால் பிரிவைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் , அவர்களது வாகன பதிவு எண்ணை கொண்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .
நகரின் எல்லைப் பகுதியில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடைகளால் , அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது .