கள ஆய்வில் முதல்வர் திட்டத்துக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று விழுப்புரத்திற்கு வருகை தர உள்ளார். இதற்காக பத்து மாவட்டத்தை சேர்ந்த 1800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டத்தின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருக்கிறது.

அரசின் திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி, மருத்துவம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்தும் அரசு அதிகாரியுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக இன்று சென்னையில் இருந்து காலை 10 மணியளவில் புறப்பட்டு விழுப்புரம் பிற்பகலில் வருகை தர உள்ளார்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மாலை 4 மணி அளவில் வணிகர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் துறைமுகம் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கடலூர் மீனவ கிராமங்களின் கோரிக்கைகள், கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள், தொழில் வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி முதல்வருடன் அதிகாரிகள் கலந்துரையாடுகின்றனர்.

இதனை முடித்துக் கொண்டு மு.க ஸ்டாலின் தொடர்ந்து விழுப்புரம் காவல் சரகத்திற் குட்பட்ட மூன்று மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். மாலை ஐந்து முதல் ஆறு மணி வரை இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அரசு சுற்றுலா மாலையில் தங்கி ஓய்வெடுக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் நாளை காலை 6 முதல் 7 மணி அளவில் நடைபயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மணி அளவில் மூன்று மாவட்ட ஆட்சியர்,மற்றும் மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மூன்று மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் நிலுவையில் உள்ள பணியில் குறித்து முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.
முதலமைச்சர் வருகையை ஒட்டி விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூரில் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையிலிருந்து விழுப்புரம் வரும் முதலமைச்சருக்கு வழிநெடுகிளும் திமுகவினர் வரவேற்பு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.