விழுப்புரம் அருகே பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொள்ள சென்ற வருவாய் கோட்டாட்சியர் உதவியாளரை அழைத்து தன் செருப்பை எடுத்து வர சொன்ன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் பிரவீனா குமாரி. இவர் நேற்று விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஸ்டாலின் நகர் குடியிருப்பு பகுதியில் வீட்டுமனை தொடர்பாக ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியும் அந்த ஆய்வுக்கு சென்றுள்ளார்.
தன்னுடைய காரில் இருந்து இறங்கும்போது வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கின்ற பொழுது அருகில் உள்ளவர்கள் செருப்பு அணியவில்லை என நினைவு படுத்திய நிலையில் உடனடியாக தன் உதவியாளர் அழைத்து காரில் இருந்து தன் செருப்பை எடுத்து வர உத்தரவிட்டுள்ளார்.
உதவியாளர் காரில் இருந்து செருப்பை கைகளால் கொண்டு வரும்போது அருகில் உள்ளவர்கள் முகம் சுழித்துள்ளனர். இதனை அறிந்த உதவியாளர் காருக்கு பின்னால் செருப்பை வைத்துள்ளார்.
வட மாநிலங்களில் தான் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்போது தமிழகத்திலும் தொடர்வது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து கோட்டாச்சியர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.