விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ளது கிழக்கு V.G.P நகர். இந்த பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் வீதியில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் சரோஜாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இன்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வருகின்ற பொழுது கதவு அருகே ஒரு பாம்பு இருந்ததை கண்டு அஞ்சினர்.
அதன் பின்னர் வீட்டுக்குள்ளே புகுந்த அந்த பாம்பை விரட்டுவதற்கு முயற்சி எடுத்தனர். முடியாத நிலையில் விழுப்புரம் தீயணைப்புப் மீட்புத் துறைனருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேர தேடலுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான உபகரணங்களில் வைத்து கொண்டு சென்றனர். வெயில் காலங்களில் இது போன்ற ஊர்வன வகைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் ஆபத்து நேர்ந்திடும் என்கிற அச்சத்தில் மக்கள் இருந்தாலும் தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் விரைந்து வந்து அதை சரி செய்த தீயணைப்பு வீரர்களுக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இது போன்ற அவசர உதவிக்கு 112 என்ற எண்ணுக்கு தொலைபேசி செய்தால் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து பகுதிக்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் பணியாற்றுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.