தமிழக அரசின் அறிவிப்பின் படி விழுப்புரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தொடங்கியது. இந்த புத்தக திருவிழாவானது 100 அரங்குகளில் தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. இதனை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது.

12 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவினை 2½ லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் அவர்கள், புத்தகங்களை வாங்கியும், சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரை, பட்டிமன்றத்தை கேட்டு மாபெரும் அளவில் வெற்றி பெறச்செய்துள்ளனர்.
அதிகப்படியான மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்கள். எவர் ஒருவர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடங்கி விட்டாரோ அவர் நல்வழியில் நடப்பதற்கான பாதையை அமைத்துக்கொண்டார் என்பது நிதர்சனமான உண்மையாகும். புத்தகம் ஒன்று மட்டுமே நல்ல கருத்துக்களை வழங்கக்கூடிய ஒரு அறிவுக்களஞ்சியமாகும். எனவே நாம் அனைவரும் புத்தகங்கள் எவ்வளவு விலையில் இருந்தாலும் வாங்கி படிக்க வேண்டும்.

நமது வருங்கால தலைமுறையினருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.