விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லை என்றும் அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. தேமுதிக தரப்பில் நவம்பர் 20-ம் தேதி அன்று வெளியிடபட்ட அறிக்கையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகதான் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி என அவர்களது குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லை என்று இன்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கூட தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.