விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார் . இதையடுத்து தான் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் தேர்தலுக்கு முன் நடிப்பதில் இருந்து முழுமையாக விலக உள்ளதாகவும் அறிவித்திருந்தார் .
இதையடுத்து இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள நடிகர் விஜயின் சொல்லுக்கிணங்க அவரது கட்சியில் ஏராளமான உறுப்பினர்கள் இன்று வரை சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகக் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த விழாவிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பனையூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கொடி அறிமுக விழாவில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். செப்டம்பர் இறுதியில் விக்கிரவாண்டியில் மாநாடு நடக்கவுள்ளதாகவும் அதற்குள் கொடியை தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.