வாச்சாத்தி பழங்குடி மக்கள் வழக்கின் தீர்ப்பு: முத்தரசன் வரவேற்பு

0
30

வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 1992 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி பழங்குடி மக்கள் கிராமத்தில் அரசு நிர்வாகத்தின் அட்டூழியம் அரங்கேறியது.அன்றைய தமிழ்நாடு அரசின் வனத்துறை அதிகாரியின் வரம்பு மீறிய குற்றச் செயல்களுக்கு வருவாய் துறை காவல்துறை நிர்வாகமும் உடந்தையாக இருந்து துணை புரிந்தனர்.நாகரிக சமுகம் வெட்கித் தலைகுனிந்து நின்ற இந்த சம்பவத்தில் வாச்சாத்தி கிராமத்தின் ஒட்டு மொத்த மக்களும் அனைத்தையும் இழந்து, வனத்துறையின் காட்டு மிராண்டி தாக்குதலுக்கும், மனித மிருகங்களின் வன்புணர்வு தாக்குதலுக்கும் ஆளானார்கள்.

முத்தரசன்

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் ஆதரவாக களம் இறங்கி நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றன.இது தொடர்பாக வழக்கை விசாரித்து வந்த தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் என 200 க்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகள் என்று உறுதி செய்து 2011 ஆம் ஆண்டு தண்டனை வழங்கியது.

மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்தனர்.

இந்த மேல் முறையீடுகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இன்று (29.09.2023) மேல்முறையீடுகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் அமர்வு – மேல்முறைகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து, குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், குற்றச் சம்பவம் நடந்த போது நிர்வாகப் பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் முதன்மை தலைமை வன அலுவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோர் மீது துறை சார்ந்த விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

வாச்சாத்தி

உயர்நீதிமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன் இந்த வழக்கு விசாரணையில் ஆரம்பம் முதல் இதுவரை அமைப்பு சார்ந்த முறையில் சட்டப் போராட்டத்தை நடத்திய வாச்சாத்தி மக்களுக்கும். ஆதரவு அளித்து வந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here