வேங்கைவயல் விவகாரம்.!செப்டம்பர் 14 க்கு ஒத்திவைப்பு.!

0
50
வேங்கைவயல் தண்ணீர் தொட்டி

சென்னை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் உயர்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில்  விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் இடைக்கால மனுவை தாக்கல் செய்து இருப்பதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான
மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்து இருந்தார்.

குடி நீர் தொட்டி

அவரது மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணனை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. சத்தியநாராயணன் தலைமையிலான இந்த ஒரு நபர் விசாரணை ஆணையம், 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்து இருந்தனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் வேங்கைவயல் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது என்றார். சத்தியநாராயணன் விசாரணை ஆணையம் தாக்கல் செய்த நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கூடுதல் வழக்கறிஞர் ரவீந்திரன் கேட்டு கொண்டார். அதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் வேங்கைவயல் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here