கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் கோவில் நிகழ்வில் பட்டியலின மக்கள் புறக்கணித்த விவகாரத்தை முதல்வவரிடம் கொண்டு செல்வதாக திருமாவளவன் பேச்சு .
கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று தடுத்து இழிவாக பேசி அவமதித்து இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர ஒருவர் மீதும் நடவடிக்கை இல்லை.
காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பட்டியலின பொதுமக்கள் கோவிலுக்குள் வழிபாடு செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கும்மிடிப்பூண்டியில் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் யூனிக் லூப்ஸ் அண்ட் கிரேசியஸ் எனப்படும் எஞ்சின் ஆயில் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அப்போது கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதிலம்பேடு கிராமத்தில் ஸ்ரீ எட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, பட்டியலின மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலை குறித்து, அவரிடம் பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்கள் முறையீட்டு மனுக்களை வழங்கினர்.
இந்த நிலையில், தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. “கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் பல்லாண்டு காலமாக தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைய முடியாத நெருக்கடிகள் நீடிக்கிறது. 2001ல் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போராட்டம் நடத்தினோம். அப்போது அதிகாரிகள் உடனிருந்து ஆதிதிராவிட பொதுமக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆனால் அதன் பின்னர் அந்த கோவிலில் திறக்காமலே வைத்திருந்தனர். பத்தாண்டுகளுக்கு பிறகு திறந்து விழா நடத்தும் போது மறுபடியும் பட்டியலின மக்கள் அந்த கோவிலுக்குள் நுழையக் கூடாது என பிரச்சனை செய்தார்கள்.
இப்போது மீண்டும் அதே நிலை. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று பாதையின் குறுக்கே டிராக்டர்களை போட்டு தடுத்து இழிவாக பேசி அவமதித்து இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர ஒருவர் மீதும் நடவடிக்கை இல்லை. காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து ஆதிதிராவிட பொதுமக்கள் கோவிலுக்குள் வழிபாடு செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இது போன்ற பிரச்சனைகளை அவ்வப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இந்த பகுதியில் நடந்த சம்பவம் குறித்தும் தொகுத்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.