மருத்துவப் படிப்பிற்கான காலியான இடங்களை இடங்களை நிரப்ப வேண்டும் – ஓ.பி.எஸ் கோரிக்கை

2 Min Read

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் காலியாக உள்ள இடங்களை மத்திய அரசிடமிருந்து திரும்பப் பெற்று அந்த இடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்ப ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையிலும், தரமான மருத்துவச் சேவைகளை மக்களுக்கு வழங்குவதிலும், மருத்துவக் கல்லூரி கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு என்று சொன்னால் அது மிகையாகாது. மருத்துவத் துறையில் தமிழ்நாடு இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.

மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு செலவழித்துள்ளது.இது தமிழ்நாட்டில் உள்ள 35-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்

இவற்றில் 85 விழுக்காடு இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீடு மூலமாகவும், 15 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான ஆண்டுக் கட்டணம் என்பது 30,000 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் மருத்துவப் படிப்பினை பயிலும் வாய்ப்பு ஏழையெளிய மாணவ, மாணவியருக்கு கிடைத்து வருகிறது.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டு மருத்துவ படிப்பிற்கான இடங்கள் காலியாக இருப்பதாகவும், இதற்குக் காரணம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மற்றும் மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆகியவை ஒரே சமயத்தில் நடக்காததுதான் என்று கூறப்படுகிறது. இந்த வகையில், இந்த ஆண்டு மூன்று கலந்தாய்வுகள் முடிந்த பின்னர், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 483 மருத்துவ இருக்கைகள் காலியாக உள்ளதாகவும், இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 59 இருக்கைகள் காலியாக உள்ளதாகவும், மத்திய கல்வி நிலையங்களில் 12 இடங்கள் காலியாக உள்ளதாகவும், என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் ஒரு இடம் காலியாக உள்ளதாகவும், தனியார் பல்கலைக்கழகங்களில் 411 இடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாடு அரசு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்றும், இனி வருங்காலங்களில் மத்திய அரசிற்கான ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு ஆகியவற்றிற்கான கலந்தாய்வினை ஒரே சமயத்தில் நடத்த வேண்டும் என்றும் மருத்துவம் பயில விரும்பும் மாணவ, மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து இருக்கைகளையும் திரும்பப் பெற்று அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியரை கொண்டு நிரப்பவும், எதிர்காலத்தில் மத்திய, மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வினை ஒரே சமயத்தில் நடத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review