கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடம் அத்து மீறுபவர்களை கண்காணிப்பதற்கு மகளிர் காவலர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் எட்டு நாட்கள் உள்ள நிலையில், கோவையில் உள்ள முக்கிய கடைவீதி பகுதியான ஒப்பணக்கார வீதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பூத்தாடைகளை வாங்கி வருகின்றனர். ஏராளமானோர் குவிந்து வருவதால் அப்பகுதியில் மாநகர காவல் துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கிகள் மூலம் கூட்டத்தை கண்காணிப்பதாகவும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களின் புகைப்படங்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமரா பதிவுகளுடன் ஒப்பிட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூட்ட நெரிசல் இருக்கக்கூடிய கடைவீதி பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தலா மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் அத்து மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக முழுவதும் பெண் காவலர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சூழலில் இந்த ஆண்டும் அது போன்ற சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த விதத்திலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.