ஆறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொண்டங்கியுள்ளது .
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல் உதவி ஆணையரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கோடநாடு வழக்கு மீண்டும் தீவிரமடைந்தது. நீலகிரிமாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. சசிகலா உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. பலர் கைது செயப்பட்டனர்.
ஆனாலும், கொலைக்கான மூலகாரணம் 6 ஆண்டுகளாகியும் வெளிவரவில்லை. முன்னதாக இந்தவழக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் தலைமையிலான போலீஸார் தினமும் இந்த வழக்கு தொடர்பாக ஆலோசித்தனர். இந்நிலையில், கோடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக, அப்போது முதல்வராக இருந்த பழனிசாமியின், பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல் உதவி ஆணையர் கனகராஜிடம் (தற்போது ஆவடி ஆயுதப்படை உதவி ஆணையர்) சிபிசிஐடி போலீஸார் நேற்று காலை 6 முதல் 10 மணிவரை விசாரணை நடத்தினர்.

கோவையிருந்து வந்த சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸார் சாதாரண உடையில் வந்து இந்த விசாரணையை நடத்தினர்.கோவையிருந்து வந்த சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸார் சாதாரண உடையில் வந்து இந்த விசாரணையை நடத்தினர். இந்த விசாரணை கனகராஜ் வசித்து வரும் சென்னை மந்தைவெளியில் உள்ள சிஐடி காவலர் குடியிருப்பில் நடைபெற்றது. அப்போது, கனகராஜ் அளித்த பதில்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எழுத்து பூர்வமாகவும் பெற்றுள்ளனர். தேவைப்படும் போது விசாரணைக்கு மீண்டும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறிவிட்டு மீண்டும் கோவைக்கு சென்றுள்ளனர்.
அடுத்த கட்டமாக மேலும் சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அதிகாரி ஒருவரிடம் சிபிசிஐடி போலீஸார் வீடு நுழைந்து விசாரணை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் சிக்க வாய்ப்புள்ளது என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.