வில்வித்தை போட்டி.! உலக சாதனை படைத்த செய்துங்கநல்லூர் பெண்.!

0
85
வில்வித்தை போட்டி

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே நாட்டார்குளம் கிராமத்தை சேர்ந்த மனோகரன்-பேச்சியம்மாள் தம்பதியினரின் மகள் சுப்புலட்சுமி என்ற மேகலா. 18 வயதான இவர் பாளை சாராள் டக்கர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்கள், நாட்டார் குளத்தில் இந்திராநகர் என்னும் இடத்தில் உள்ள சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறார். இவருக்கு 2 அண்ணன். ஒருவர் கொடிமரத்தான், இளையவர் பேச்சிமுத்து. இவர்கள் 2 பேரும் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார்கள். மேகலாவின் தந்தை விவசாயி. தாயார் பேச்சியம்மாள் செங்கல் சூளையில் சுமை
தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். சிறு வயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட மேகலாவை அவரது பெற்றோர், நெல்லை மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சேர்த்தனர்.

சுப்புலட்சுமி என்ற மேகலா

இந்த சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சண்முகநாதன் இவருக்கு வில்வித்தையில் அனைத்து வித்தையையும் கற்றுக் கொடுத்தார். 2 வருடத்தில் தேர்வு பெற்ற மேகலா சர்வதேச விளையாட்டு போட்டியில் விளையாட தயாரானார். முதலில் மாநில அளவில் சிவகாசியில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு 2-வது இடத்தினை பெற்றார். தொடர்ந்து இவரது சாதனை தொடர ஆரம்பித்தது.
இலங்கையில் நடந்த கொழும்பு ஓபன் சர்வதேச வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். மறுநாள் நடந்த சோழன் உலக சாதனை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உலக சாதனையாளர் சான்றிதழையும் பெற்றுள்ளார். மேகலாவுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி வரும் நெல்லை மாவட்ட சர்வதேச வில்வித்தை சங்க பொதுச்செயலாளர் டாக்டர் சண்முகநாதன் இது குறித்து கூறுகையில், நாங்கள் வில்வித்தையில் ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து போட்டியில் கலந்து கொள்ள செல்வோம். கொழும்பு ஓபன் சர்வதேச வில்வித்தை போட்டியில் நடக்க உள்ளதை அறிந்தோம்.

சுப்புலட்சுமி என்ற மேகலா

எனவே நாங்கள் 27 பேர் அங்கு பயணம் செய்தோம். அதில் 18 வயதினருக்கான போட்டியில் மேகலா கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். மறுநாள் சோழன் உலக சாதனை நிகழ்ச்சியிலும் கலந்து
கொண்டு உலக சாதனையாளர் ஆனார். அரசு மேகலா போன்ற கிராமப்புற மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும். கிராம மக்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மாணவி மேகலா இதுகுறித்து கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்தே குறி வைத்து அடிப்பது பிடித்த விஷயம். பாளை சாராள் டக்கர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பின் நெல்லை மாவட்ட வில்வித்தை சங்கம் குறித்து அறிந்தேன். இது குறித்து எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் என்னை ஊக்குவித்து அங்கு சேர்த்தனர். நன்றாக பயிற்சி எடுத்த பின் முதன் முதலாக 9-ம் வகுப்பு படிக்கும்போது சிவகாசியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு 2-ம் பரிசு பெற்றேன்.

சுப்புலட்சுமி என்ற மேகலா

அப்போது, முதன் முதலில் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது பயம் இருந்தது. அதன் பின் எனக்கு எந்த பயமும் இல்லை. தேசிய அளவில் பல போட்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளேன். இப்போது முதன் முதலில் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளேன். அங்கு நான் 18 வயது பிரிவில் கலந்து கொண்டேன். 30 மீட்டர்வில் அம்பு வித்தையில் 6 ரவுண்டு விளையாடினேன். ஒரு ரவுண்டுக்கு 6 அம்புகள் வீசினேன். இதில் அனைத்திலும் நான் முதலிடம் பிடித்தேன், என்று கூறினார். மாணவி மேகலா ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். வீட்டில் உள்ள 4 பேரும் கூலித்தொழிலாளிகளே. மேலும் ஓட்டு வீட்டில் ஒரே ஒரு அறையில் தான் வசித்து வருகிறது இவரது குடும்பம். மேகலா போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதோடு, ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். இந்த மாணவிக்கு சரியான உதவி கிடைத்தால் நிச்சயம் ஐ.ஏ.எஸ். ஆகி விடுவார். அதோடு மட்டுமல்லாமல் வில்வித்தையில் தொடர்ந்து உலக சாதனை புரிந்து தமிழகத்துக்கு சிறப்பை பெற்றுத் தருவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here