தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசையும், திராவிட மாடலையும் விமர்சித்துப் பேசியிருப்பது, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, திராவிட மாடல் காலாவதியான கொள்கை, தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக இருக்கிறது என்று ஆளுநர் ரவி கூறியிருக்கிறார். இதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழக தலைவர்கள் தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. சென்னை பல்கலைக்கழகம் 10வது இடத்திலிருந்து நூறாவது இடத்திற்கு சென்று விட்டதாக ஆளுநர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகம் உலக அளவில் 547 வது இடத்திலும் இந்திய அளவில் 12வது இடத்திலும் உள்ளது. அதேபோல் மாநில கல்லூரி இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது. உண்மை நிலவரம் இப்படி இருக்க யார் எழுதிக் கொடுத்த குறிப்பை ஆளுநர் இப்படி தவறாக வாசிக்கிறார் என்று தெரியவில்லை.உண்மைக்கு எதிராக ஆளுநர் பேசிவருகிறார்.

திராவிட மாடல் ஆட்சி நடக்கிற இந்த காலகட்டத்தில் தான் கல்வித்துறை மிகச் சிறப்பாக வளர்ச்சி பெற்று உள்ளது.இது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாடு ஆளுநர் கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது தமிழ்நாட்டில் கல்வித் தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பேசிவிட்டு இப்போது மாற்றிப் பேசுவது என்ன நியாயம். அரசியலுக்காக இப்படி பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆளுநர் உண்மையான தரவுகளை தேடி அறிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு ஏதேனும் தவறு இருந்தால் அவர் சுட்டிக் காட்டட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர் தான் அரசியல் செய்து வருகிறார். யு.பி.எஸ்.சி படிக்கும் மாணவர்களை அழைத்து அவர்களிடம் சனாதனம் பற்றி பேசி வருகிறார். ஆளுநராக இருப்பவர் இதுபோன்ற அரசியல் பேசுவது தவறான ஒன்று. ஆளுநர் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. மத்திய அரசினுடைய பிரதிநிதியாக அவர் செயல்பட்டு வருகிறார். மாநில அரசு என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்ப செயல்பட வேண்டியது தான் ஆளுநரின் கடமையாக இருக்க வேண்டும்.

திராவிடம் காலாவதி ஆகவில்லை. சனாதனம் என்பதுதான் காலாவதி ஆன ஒன்று. திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதியாகிவிட்டது. ஆளுநர் பதவி தான் காலாவதி ஆக வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிடம் இன்று அகில இந்திய அளவில் பரவத் தொடங்கி இருக்கிறது. திராவிடம் என்பது சமூக நீதிக்காக, மனித நேயத்திற்காக மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.இதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். திராவிடம் என்பது யாரையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட கொள்கை அல்ல. திராவிட இயக்கம் பற்றி நான் எழுதிய புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று திட்டமிட்டுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள சமூக நீதி இயக்கங்களுக்கு வழிகாட்டியாக திராவிட இயக்கம் திகழ்ந்து வருகிறது. திராவிடம் என்பது தமிழ்நாடு, இந்தியா, உலகத்துக்கு ஏற்ற கொள்கை.” எனத் தெரிவித்துள்ளார்.