நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில் உதகையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையை சேர்ந்த நந்தினி, நிரஞ்சனா ஆகிய இரு பெண்கள், ஊட போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதற்காக மதுரையிலிருந்து பேருந்து மூலம் கோவை நோக்கி வந்து அவர்களை சூலூர் போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முற்பட்டனர். அப்போது அப்பெண்கள் ஆனந்தி என்ற பெண் காவலரை கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

இதை அடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.