விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமத்தை சார்ந்த தாமோதரன் மகளின் திருமணம் வருகின்ற 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக அவரது உறவினர்களாக விழுப்புரம் அருகே உள்ள ஆனாத்தூரை சார்ந்த சுரேஷ் மற்றும் நல்லாத்தூரை சார்ந்த பெருமாள் ஆகியோர் குடும்பத்துடன் தாமோதிரனின் வீட்டிற்கு திருமணத்திற்காக வந்துள்ளனர்.
இந்நிலையில் பெருமாள் மற்றும் சுரேஷ் குடும்பத்தினர் திருமண விழாவிற்கு பாத்திரங்கள் வாங்க விழுப்புரம் சென்றிருந்தனர். வீட்டிலிருந்த சிறுமி, சிறுவன் பக்கத்துவீட்டு சிறுமி கோடீஸ்வரியுடன் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென பெருமாள் என்பவரது 9 வயது மகன் ஐயப்பன் மற்றும் சுரேஷ் என்பவரது மகள் சுபஸ்ரீ ஏரி நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து இவர்களுடன் குளித்து கொண்டிருந்த சிறுமி கரைக்கு வந்து காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஏரியின் அருகில் நூறு நாள் வேலை செய்திருந்தவர்கள் ஏரியில் மூழ்கிய சிறுமி,சிறுவனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். கரைக்கு கொண்டு வந்த போது சிறுமி, சிறுவனும் இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரியதச்சூர் போலீசார் இருவரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்களின் பிள்ளைகள் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏரி மூழ்கி இறந்த குழந்தைகளை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்கள் குழந்தை இழந்து வாடும் உறவினர்களுக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.