இன்று அதிகாலை தாம்பரம் மாநகர காவல் துறையினர் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி சாலையில் அதிகாலை 3.30 மணி அளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சென்னை பகுதியில் அதிகாலை நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்வது தொடர்ந்து இந்த வாகன தணிக்கை நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
வாகன தணிக்கையில் ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கருப்பு நிற ஸ்கோடா காரை நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால் அந்த கார் நிற்காமல் போலீசாரின் வாகனத்தை இடிப்பது போலவும், போலீசார் மீது மோதுவது போலவும் வந்தது. வந்த வேகத்தில் நின்ற அந்த காரில் இருந்து நான்கு நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி போலீசாரை தாக்க முற்பட்டனர்.
அதில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுப்பட்டது இதை பார்த்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து அவர்கள் மீது சுட்டனர். இதில் இரண்டு நபர்கள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து அங்கேயே விழுந்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் பற்றி விசாரித்த போது ஒருவர் பெயர் வினோத் என்கிற சோட்டா வினோத் என்றும் அவர் மீது ஓட்டேரி காவல் நிலைய பதிவேட்டில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அதில் 10 கொலைகள் 15 கொலை முயற்சிகள் 10 கூட்டு கொள்ளை 15 அடிதடி வழக்குகள் என தெரிய வந்தது.
மேலும் இன்னொரு நபரைப் பற்றி விசாரித்த போது அவருடைய பெயர் ரமேஷ் என்றும் அவரும் ஓட்டேரி காவல் நிலையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது. அந்த வழக்குகளில் ஐந்து கொலை மற்றும் ஏழு கொலை முயற்சி வழக்குகள் மற்றும் எட்டு அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் இடமிருந்து தப்பிப்பதற்காக போலீசாரை தாக்கி விட்டு செல்வதற்கு திட்டமிட்ட அவர்களை போலீசார் சுட்டவுடன் அதே இடத்தில் மயங்கி விழுந்தனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர் பாதிக்கப்பட்ட காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டது சென்னை பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.