உலகெங்கும் வாழும் தொழிலாளர்களின் உரிமைகளை போராடி வென்றெடுத்த இந்த நன்நாளில் தொழிலாளர் தோழமைகளுக்கு என் நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது,”விவசாய நிலங்களில் வியர்வை சிந்த உழைப்பவர் முதல் ரிசர்வ் வங்கி அச்சகத்தில் பணியாற்றுபவர் வரை இந்த நாட்டின் அன்றாட செயல்பாடுகளை இயக்கும் அச்சாணிகள் தொழிலாளர்கள். உழைப்பாளிகள் இன்றி எந்த ஒரு உற்பத்தி, சேவை, விநியோகம் ஆகியவை வெற்றிகரமாக இயங்குவது சாத்தியமில்லை.
உலகளாவிய பொருளாதாரம், பெருநிறுவனங்களின் பணி சூழலில் 8 மணி நேர வேலை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட உரிமைகள் தொழிலாளர்களுக்கு தடையின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுதான் தொழிலாளர்களுக்கான உண்மையான மே தின கொண்டாட்டமாகும்.
உழைப்பவரே உலகில் உயர்ந்தவர் என்பதை உரக்கச் சொல்லி உலகை இயக்கிவரும் தொழிலாளர்களுக்கு நாம் என்றும் துணை நிற்போம் என மே தினத்தில் உறுதி ஏற்போம்” எனக் கூறியுள்ளார்.