விழுப்புரம், அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல்போன முதியவர் ஜபருல்லாவை மீட்டுத் தரும்படி அவரின் உறவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்பட்ட ஆசிரமத்தின் சுயரூபம் தமிழகத்தையே அதிரவைத்திருந்தது. ஜபருல்லாவுடன் 16 பேர் காணாமல்போனது, மனவளர்ச்சி குன்றியோர் துன்புறுத்தப்பட்டது, பெண்கள் பாலியல்ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது, வளர்ப்புக் குரங்குகளைக் கடிக்கவைத்து சித்ரவதைச் செய்தது, உரிமம் இல்லாமலே ஆசிரமம் செயல்பட்டது எனப் பல்வேறு தகவல்கள் பகீர் கிளப்பியிருந்தன.
இந்த நிலையில், இந்திய அளவிலுள்ள காப்பகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, மாயமானவர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி மேலும் அச்சத்தை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாக, கெடார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட இரண்டு புகார்களின் அடிப்படையில், 13 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆசிரம உரிமையாளர்களான ஜூபின் பேபி – மரியா ஜூபின் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆசிரமத்துக்கு எதிராக அடுத்தடுத்து புதிய புகார்கள் (Missing Complaint), கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தேசியக் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தினர் இது குறித்து அண்மையில் நேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில், 21-ம் தேதி முதல் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஆசிரமம் தொடர்பாக விழுப்புரத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையிலான ஐந்து பேர்கொண்ட குழுவினர், 21-ம் தேதி முதற்கட்டமாக அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பெண்கள், 14 ஆண்கள் என மொத்தம் 20 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் இதன் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடட்ர்ந்து நடந்து வருகின்றது .
இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்களது காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்துள்ளது நீதிமன்றம் .