மாதர்பாக்கம் அருகே மாந்தோப்பில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த காவலாளி. சடலத்தை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை. மனைவியை கொலை செய்து தலைமறைவான குற்றவாளி ஏழு தினங்களுக்கு பின்னர் பிடிபட்டான்.
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த கரடிபுத்தூர் பகுதியில் சேலத்தைச் சார்ந்த கேசவன் என்பவர் மாந்தோப்பு ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் புட்டிரெட்டி கண்டிகையை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த தர்மய்யா , என்பவர் இந்த மாந்தோப்பில் காவலாளியாக கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்துள்ளார். இவர் தமது மனைவி லட்சுமி மற்றும் 3வயது மகனுடன் மாந்தோப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23ஆம் தேதி ஞாயிறன்று கேசவன் மாந்தோப்பிற்கு வந்த போது கணவன், மனைவி இருவரும் சண்டை போட்டு கொண்டிருந்ததாகவும், தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு சென்று மீண்டும் மாலையில் வந்து தர்மய்யாவிடம் கேட்டபோது அருகில் உள்ள மாந்தோப்பிற்கு பணியாற்றும் தமது உறவினரை பார்க்க மனைவி சென்றுள்ளதாக கூறி குத்தகைதாரரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு தர்மய்யா தமது குழந்தையுடன் சென்றுள்ளார்.

மறுநாள் தர்மய்யா திரும்பி வராததால் குத்தகைதாரர் கேசவன் பக்கத்து மாந்தோப்பில் பணியாற்றும் தர்மய்யாவின் உறவினரை அழைத்து கொண்டு ஆந்திரா சென்று விசாரித்துள்ளார். அப்போது தர்மய்யா தமது குழந்தையை மட்டும் அழைத்து வந்ததாகவும் தர்மய்யா எங்கு சென்றார் என தெரியாது என்று தர்மையாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து குத்தகைதாரர் கேசவன் தமிழ்நாடு திரும்பி வந்தார். இந்நிலையில் தர்மய்யா குடிபோதையில் இருந்தபோது தமது மனைவியை அடித்து கொலை செய்து மாந்தோப்பில் புதைத்து விட்டதாக தெரிவித்ததாக தர்மய்யாவின் உறவினர் ஒருவர் மாந்தோப்பிற்கு வந்து கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குத்தகைதாரர் கேசவன் மாந்தோப்பில் சுற்றிபார்த்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் மணல் குவியல் மீது ஈ மொய்த்து கொண்டு இருந்தது. இதுகுறித்து பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு கொடுத்த இந்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி முன்னிலையில் காவல்துறையினர் மாந்தோப்பில் புதைக்கப்பட்ட காவலாளியின் மனைவி லட்சுமி சடலத்தை அழுகிய நிலையில் தோண்டி எடுத்தனர்.

தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி அளித்த புகாரின் பேரில் பாதிரிவேடு போலீசார் கொலை மற்றும் கொலைக்கான தடயங்களை மறைத்தல் என ஐபிசி 302, 201 ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கொலையாளி தர்மையாவை தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம் புட்லூர் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி தர்மையாவை பிடித்த பாதிரிவேடு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.