“போலீஸ் ஆவதே எனது இலட்சியம்” – ஒட்டுமொத்த திருநங்க …

3 Min Read
யாழினி

தேசிய திருநர் தினமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி திருநங்கை மற்றும் திருநம்பி மக்கள் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த திருநங்கை யாழினி (27) என்பவர் போலீஸ் வேலை வாங்கியே ஆகவேண்டும் என்ற இலட்சிய  கனவுடன் சட்டப் போராட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உம்பளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநங்கை யாழினி, இவர் பி.இ மெக்கானிக் படித்துள்ளார், இவரது தாயார் தனது சொந்த ஊரில் இறந்துவிட்ட நிலையில், இவர் தஞ்சையை அடுத்த மானோஜிபட்டியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார், இந்நிலையில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று பின்னர் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 2021ல் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டார்.

அதில் அவரது உயரம் 158.5 சென்டிமீட்டர் உயரம் இருந்ததால் காவல்துறை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டார், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் யாழினி வழக்கு தொடர்ந்து, இடைக்கால உத்தரவு பெற்று மீண்டும் 2021 செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆனால் இதுவரை அவருடைய மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக சட்டப் போராட்டம் தொடுத்த யாழினியின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனையடுத்து அவரது  முயற்சியை கைவிடாமல் மீண்டும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயாராகி வருகிறார், இதுகுறித்து திருநங்கை யாழினி கூறும் போது, தேசிய திருநர் தினத்தில் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும்,தனது லட்சியமே தான் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது மட்டுமே என்று தெரிவித்துள்ளார் .

இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக போராடி வருவதாகவும், புத்தகங்கள் வாங்கக்கூட காசு இல்லாமல் தனது நண்பர்கள் வாங்கி கொடுத்த புத்தககங்கள் மூலம் போலீஸ் வேலைக்கு படித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார் .

தங்களுடைய முக்கிய கோரிக்கையாக திருநங்கை திருநம்பி மக்களுக்கான தனி இட ஒதுக்கீடு 1 சதவீதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்க வேண்டும் .

மற்ற மாநிலங்களை காட்டிலும்  தமிழகத்தில் படித்த திருநங்கைகள் திருநம்பிகள் அதிகம் பேர் உள்ளனர், பக்கத்து மாநிலமான கர்நாடகா அரசு திருநங்கைகள் திருநம்பிகளுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர் ஆனால் தமிழத்தில் திருநங்கைகளுக்கு இலவசங்களுக்கும் , சலுகைகளுக்கும் கிடைக்கும் முன்னுரிமை ,  அடிப்படை தேவையான கல்வி, வேலைவாய்ப்பில் கிடைப்பதில்லை.

எனவே  தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் , திருநங்கைகளுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் தங்களது முக்கியமான நீண்ட கால கோரிக்கை என்று தெரிவித்தார், அவை நிறைவேற்றப்பட்டால்  பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு அவசியம் இருக்காது, பெற்றோர்கள் சமூக ஏற்பு என்ற நிலை ஏற்படும.

சமூக ஏற்பு என்பது அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும், 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே தீர்வு ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெற்று நாங்கள் முன்னேற முடியும்.

திருநங்கை, திருநம்பி மக்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு சட்டப் போராட்டத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது, கடந்த குரூப்-4 தேர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் தேர்வு எழுதி அதில்15 பேர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர், இவர்களுக்கு இதுவரை எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை, தங்களுடைய திருநங்கைகள் என்ற பாலினத்தை பெண்கள் மற்றும் MBC,OBC பிரிவிலும் இணைக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் கஷ்டப்பட்டு படித்து போராடி மற்றவர்களுடன் போராடி ஜெயிக்க முடியவில்லை, இதனால் தங்களது சமூகம் பின்னுக்கு செல்வதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார் , திருநங்கை யாழினி .

Share This Article
Leave a review