போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய பேச்சை தொடங்க வ …

Sathya Bala
3 Min Read

போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய பேச்சை தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 14-ஆம் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது. நடப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து 15-ஆம் ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், அதற்கான பேச்சுக்களைக் கூட தொடங்குவதற்கு போக்குவரத்துத் துறை முன்வராதது தொழிலாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ்

தமிழ்நாட்டில் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு கடந்த 50 ஆண்டுகளாகவே 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுக்கும், போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஊதிய மாற்று பேச்சுகள் நடத்தப்பட்டு, அதில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 14-ஆம் ஊதிய ஒப்பந்தம், அதன் நான்காண்டு காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து காலாவதியாகி விட்டது. புதிய ஊதிய ஒப்பந்தம் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். அதற்கான பேச்சுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஊதிய மாற்று ஒப்பந்த பேச்சுகளைத் தொடங்கும்படி பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் சில வாரங்களுக்கு முன்பே தமிழக அரசு, போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் உள்ளிட்டோருக்கு நினைவூட்டல் கடிதத்துடன், 50 கோரிக்கைகள் அடங்கிய மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும் கூட ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுகள் தொடங்கப்படாதது தொழிலாளர்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. புதிய ஊதிய ஒப்பந்தம் எந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வரவேண்டுமோ, அந்நாளுக்கு முன்பாகவே பேச்சுகள் நடத்தி முடிக்கப்பட்டு, ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது தான் சரியாகும்.

போக்குவரத்துக்கழக தொழிலாளர்

ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாகவே இந்த வழக்கம் நடைமுறையில் இல்லை. பல தருணங்களில் ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகும் காலம் வரை அதற்கான பேச்சுகளே தொடங்கப்படுவதில்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை. 2019-ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் நடைமுறைக்கு வந்த 14-ஆம் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுகள், 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, அந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தான் நிறைவடைந்தது. அதாவது ஊதிய ஒப்பந்தக் காலத்தில் 3 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு தான் புதிய ஊதிய ஒப்பந்தமே கையெழுத்திடப்பட்டது. ஊதிய ஒப்பந்த பேச்சுகள் மிகவும் காலம் கடந்து தொடங்கப் படுவதாலும், குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்பந்தத்தை கையெழுத்திட வேண்டிய தேவை இருப்பதாலும், தொழிற்சங்கங்களால் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது.

தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான இத்தகைய சூழல்களைத் தவிர்க்கவே ஊதிய ஒப்பந்தப் பேச்சுகள் முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடந்த காலங்களைப் போலவே 14-ஆம் ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான ஊதியம் 2.57 காரணியைக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 2.44 காரணியைக் கொண்டு தான் நிர்ணயிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், இம்முறை அடிப்படை ஊதியத்தில் 20% உயர்வு வழங்கப்பட வேண்டும், ஆண்டு ஊதிய உயர்வாக 5% வழங்கப்பட வேண்டும், ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 50-க்கும் கூடுதலான கோரிக்கைகள் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களால் முன்வைக்கப் படும் நிலையில், அது குறித்து பேசித் தீர்வு காண அதிக காலம் தேவைப்படும். அதைக் கருத்தில் கொண்டு தான் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 15-ஆம் ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுகளை உடனடியாகத் தொடங்கவும், 2023-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திற்குள் பேச்சுகளை முடித்து ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3,000 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப் படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review