உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 18-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக அரவாண் சாமி கண் திறத்தல், திருநங்கைகள், கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிகள் வருகிற 2-ந் தேதியும், தேர் திருவிழா, தாலி அகற்றும் சடங்குகள் மறுநாள் 3-ந் தேதியும் நடைபெறும்.
இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொள்கின்றனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னை திருநங்கை தலைவிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற நிகழ்ச்சியை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு முன்னிஜி நாயக் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளித்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, முன்னேற்ற பாதையில் தமிழக திருநங்கைகள் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது.
மிஸ் திருநங்கை தேர்வு
அதன் பின்னர் மிஸ் திருநங்கை-2023 தேர்வு, திருநங்கைகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நடனப்போட்டிகள், கிராமிய கலைகளில் புகழ்பெற்ற திருநங்கையரின் தெருக்கூத்து, கனியன் கூத்து ஆட்டங்களும் நடைபெற்றன.
இதில் திருநங்கைகள் பலரும் கலந்துகொண்டு இசைக்கேற்ப நடனமாடி அசத்தினர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்களாக கலந்துகொண்ட மற்ற திருநங்கைகளும் பாடலுக்கு ஏற்ப கைத்தட்டி ஆரவாரம் செய்ததோடு குத்தாட்டமும் போட்டனர். தொடர்ந்து, மிஸ் திருநங்கைக்கான தேர்வு போட்டியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம்வந்தனர். இவர்களில் நடை, உடை, பாவணை அடிப்படையிலும், பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையிலும் பதில் அளித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சேலம் பிரகதி சிவம் முதலிடம் பெற்றார். சென்னை வைஷீ இரண்டாம் இடமும், தூத்துக்குடி பியூலா மூன்றாம் இடம் இவர்களுக்கு ‘மிஸ் திருநங்கை-2023’ கிரீடம் சூட்டப்பட்டது.