நெல்லையில் ஒருதலைக் காதலால் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார்
திருநெல்வேலி பேட்டையை அடுத்த திருப்பணி கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.விவசாயி.இவரது 3 வது மகள் சந்தியா(18).இவர் திருநெல்வேலி டவுண் கீழரத வீதியில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை(பேன்சி ஸ்டோர்)கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று (02-10-2023)நண்பகலில் கடைக்கு தேவையான பொருட்களை எடுத்து வர அம்மன் சன்னதி தெருவில் உள்ள குடோனுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பாததால் மற்றொரு கடை ஊழியர் குடோனுக்கு சென்று பார்த்த போது சந்தியா படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.உடனடியாக அந்த ஊழியர் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்.அவர் இது குறித்து நெல்லை டவுண் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை மாநகர போலீசார் கொலையுண்ட சந்தியாவின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியாவை அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் வேலை பார்த்து வரும் முனைஞ்சிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(22)என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.ஆனால் அவரது காதலை ஏற்க சந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் கண்ணன் திட்டமிட்டு சந்தியா தனியாக குடோனுக்குள் கடைக்கு பொருட்கள் சென்றதை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்று மறைத்து கொண்டு சென்ற அரிவாளைக் கொண்டு படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் சம்பவம் நடந்த அம்மன் சன்னதி தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் கொலையுண்ட சந்தியாவின் உறவினர்களும்,திருப்பணி கரிசல்குளம் கிராமத்தினரும் கொலையாளியை உடனடியாக கைது செய்ய கோரி சாலை மறியல் செய்தனர்.இதனால் மாலை வேளையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் நெல்லை டவுண் பகுதி மிகுந்த சிரமத்துக்குள்ளானது.போலீசார் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் மறியல் கைவிடப்பட்டது.இந்த படுகொலை தொடர்பாக நெல்லை டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து முனைஞ்சிப்பட்டி வாலிபர் ராஜேஷ் கண்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.