தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுபடுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதேபோல் திண்டிவனத்தில் வெளி சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாயும்,உழவர் சந்தையில் 100 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,விற்பனையாகிறது.

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்திரவின்படி, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி உழவர் சந்தையில் செயல்பட்டு வரும் தோட்டக்கலைத் துறை மூலம் விசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி 80 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறுகையில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தக்காளியை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யும் நோக்கில் உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விற்பனை திண்டிவனம் உழவர் சந்தையில் காலை 6 மணி முதல் செய்யப்படும்.இதேபோல் நாளுக்கு நாள் விலையை குறைத்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திண்டிவனம் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் தக்காளியை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர். ஒரு சில நாட்களில் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.