கடும் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும்
கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வட மாநிலங்களில் பல இடங்களில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக மழை கொட்டி வருகிறது. அண்டை மாநிலங்களான தெலுங்கனா,
ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் கூட கனமழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் காய்கறி வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தக்காளி:
கனமழையால் செடிகளில் காய்கறி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மழை பாதிப்பால் விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகவே காய்கறி விலை படுவேகமாக உயர்ந்து வருகிறது. இடையில் கொஞ்சக் காலம் தக்காளி விலை குறைந்து வந்தது. கடந்த 24ஆம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ. 70 வரை சென்றது. தக்காளி விலை அதன் பிறகு தொடர்ந்து குறையும் என்றே பலரும் நினைத்தனர்.
இருப்பினும், அதன் பிறகு திடீரென மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியது. மீண்டும் உயர்வு: இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 140க்கு விற்பனையானது. அதற்கு முன்பு ஒரே நாளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.30 உயர்ந்தது. நேற்று தக்காளி விலை மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. இன்றைய தினம் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ. 150க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையிலேயே ரூ. 150க்கு தக்காளி விலை சென்றுவிட்ட நிலையில், சில்லறை விலையில் தக்காளி விலை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
ஒரு கிலோ ரூ. 150:
கோயம்பேடு சந்தையில் இன்று முதல் கிரேடு தக்காளி ரகம் ஒரு கிலோ ரூ. 150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் கிரேடு தக்காளி ரகம் கிலோ ஒன்று ரூ. 140க்கும், மூன்றாம் கிரேடு தக்காளி ரகம் கிலோ ஒன்று ரூ. 130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தக்காளி விலை ரூ.50 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாத நிலையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆடி வெள்ளி, மொஹரம் பண்டிகை உள்ள நிலையில், தேவைக்கு ஏற்ப தக்காளி வரத்து இல்லாமல் போனதே விலை அதிகரிக்கக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
எப்போது குறையும்:
இன்று கோயம்பேடு சந்தைக்கு 400 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில், அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தக்காளி மட்டுமின்றி மேலும் பல காய்கறி விலையும் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் தக்காளி விலை குறைய வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. மழை குறைந்து விநியோக சங்கிலி சீரடைந்தால் மட்டுமே தக்காளி விலை கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.