தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்று கூறியுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் – 12 மணிநேர வேலைத்திட்டத்தை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார் .
8 நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் செய்யவேண்டும் என்றும் , இதற்கு ஈடாக வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்று , ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது .
இதற்கு எதிர் காட்சிகள் , திமுக கூட்டணி காட்சிகள் தொடங்கி அணைத்து தொழிற்சங்ககங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் “சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று “2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)”, தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் இன்று (24-4-2023) அமைச்சர்கள் , தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை.
கலைஞரின் வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால், அவற்றை ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கிணங்க, அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு அக்கறை காண்பிக்கும் .
அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)”- என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது, என்று தெரிவித்தார்.