கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு கன்னட பாடல் இசைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கர்நாடக மாநில பாஜக இணை பொறுப்பாளர், அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரத்திற்கு பல அரசியல் தலைவர்கள் தனது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் கவிஞர் வைரமுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் என்று கூறியுள்ளார்.
அவர் தனது ட்வீட்டில் கூறியதாவது,
“கர்நாடகா மேடையில்
தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டது கண்டு
இடிவிழுந்த மண்குடமாய்
இதயம் நொறுங்கியது
ஒலிபரப்பாமல்
இருந்திருக்கலாம்;
பாதியில் நிறுத்தியது
ஆதிமொழிக்கு அவமானம்.
கன்னடத்துக்குள்
தமிழும் இருக்கிறது;
திராவிடத்திற்குள்
கன்னடமும் இருக்கிறது
மறக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.