அதிமுக பொதுச்செயலாளரும்,எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த
தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து
விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா நெருக்கடி சற்று தணிந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளை நடத்தியது.
இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்பட வில்லை என்றாலும்,
பல மாஜி அமைச்சர்கள் அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்று சில நாள்களே ஆன நிலையில் தற்போது அவர் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2017 – 2021 காலகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தபோது,
11 மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை கேட்டது.
முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரிய நிலையில்,
தமிழக அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
எடப்பாடிக்கு செக் வைக்க முற்படுகிறதா திமுக என அதிமுக கட்சிக்காரர்கள் கொந்தளிக்கிறார்கள். யார் எப்படி பேசினாலும் மாட்டுவது மாட்டுவது தான் என்கிறது திமுக சைட்.
இவர்கள் மாத்தி மாத்தி அடித்துக்கொள்ள இவர்களின் இடையில் மாட்டிக் கொண்டு மக்கள் தான் பாடு படுகிறார்கள்!