தலித் இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது.
அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் வசித்து வருகிறார் அந்த பெண். 30 வயதாகிறது. இந்த பெண் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
இவரது கணவர் வேலை விஷயமாக, வெளியூருக்கு சென்றிருந்தார். 2 பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அதனால் வீட்டிற்குள் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த ஷகுர் என்பவர், திடீரென இந்த பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த ஷகுர் அதிர்ச்சி அடைந்து, என்ன செய்வதென்று தெரியாமல், அங்கிருந்த ஆசிட்டை எடுத்து, பெண்ணின் மீது ஊற்றி, தீவைத்து கொளுத்திவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, பெண்ணை மீட்டனர்.

ஆனாலும், 40 சதவீதம் அவரது உடல் தீக்காயம் அடைந்துவிட்டது.. ஜோத்பூரிலுள்ள அரசு மருத்துவமனையிலும் அவர்கள் அனுமதித்திருக்கிறார்கள். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவுசெய்ததுடன், சம்பந்தப்பட்ட ஷகுர் என்பவரையும் கைது செய்துள்ளது. இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி, “உயிரிழந்த பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்ததால், அவரின் மனைவி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
அவர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஷாகுர் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அதன் பிறகே தீவைப்பு சம்பவம் நடந்திருக்கிறது. குற்றவாளி கைதுசெய்யப்பட்டு, அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302 (கொலைக்கான தண்டனை), பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் முடிந்த பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்தான் ஷகுர்.. அவருக்கும் 30 வயதாகிறது. பெண்ணை பலாத்காரம் செய்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், பாத்ரூம் கழுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை கொண்டு வந்து, இந்த பெண்ணின் வாயில் ஊற்றிவிட்டு, அதற்கு பிறகு தீ வைத்து கொளுத்தியிருக்கிறார். மருத்துவமனையில் சீரியஸாக இருக்கும்போதே, அந்த பெண்ணிடம், உள்ளூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதற்கு பிறகுதான், பார்மர் போலீஸ் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசிட் அல்லது வேறு ஏதேனும் கெமிக்கல் பொருள் வீசப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருகிறது. பாஜக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது.
முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டுகிறது. மாநிலத்தில் காட்டு ராஜ்ஜியம் நிலவுவதாக சாடியதுடன், தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, எதிர்கட்சியான பாஜக முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்நிலையில், பலோத்ராவைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் பிரஜாபத், எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறார்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிதியுதவி செய்வதாக உறுதியளித்ததாகவும் ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டதாகவும் மதன் பிரஜாபத் தெரிவிக்கிறார்.
அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரவேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.ஜோத்பூர் மருத்துவமனையில் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பார்மர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அஷ்வின் பன்வார்,
அவர்கள் சொந்த ஊரான பலோத்ராவுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது பாஜக.
இதற்காகவே, அந்த மாநிலத்தின் புதிய தலைவராக சந்திர பிரகாஷ் ஜோஷியை நியமித்து உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அம்மாநிலத்தில் எந்தவொரு வன்முறை சம்பவங்கள் நடந்தாலும்,
அதை கடுமையாக விமர்சிக்க துவங்கி உள்ளது பாஜக.
அந்தவகையில், தலித் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.