இந்தியா பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோக்கியும் சமூகம் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையில் பின்னோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு சாதி மற்றும் மதம் சார்ந்த வேற்றுமைகளே காரணம். “மதம் உன்னை மிருகமாக்கும், சாதி உன்னை சாக்கடையாக்கும்” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகளின் அர்த்தம் இன்று நமக்கு புரிகிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை புரிந்திருந்தால் அந்த பகுத்தறிவு பகலவனின் கனவு நிஜமாகி இருக்கும்.
ஒரு நாடு எந்தவிதத்தில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மலம் என்ற சொல்லை கூட நாலுபேருக்கு மத்தியில் உச்சரிக்கத் தயங்கும் போது தான் கழித்த மலத்தை கொஞ்சமும் அருவருப்பின்றி சக மனிதனை அள்ளச் சொல்லுவது தான் தீண்டாமையின் உச்சம். இப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை.
கையால் மலம் அள்ளுவது ஒரு தேசத்தின் அவமானம் என்று கூறும் பொதுநலவாதிகளாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகட்டும் தங்களுக்குள்ளாகவே கேட்க வேண்டிய கேள்வி, தேசத்தின் அவமானத்தை அகற்றும் பொறுப்பு அனைவருக்குமே உண்டு, நம்மில் எத்தனை பேர் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் தங்களின் பகுதியில் உள்ள சாக்கடையில் அடைப்பு எற்பட்டு துர்நாற்றம் வீசும்போது அதை சமூக அக்கறையுடன் சுத்தப்படுத்த முன்வருகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சாக்கடை நீரில் கால் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து ஒதுங்கி நடக்கும் நாமும் மனிதர்கள் தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் மலமும், சிறுநீரும் மற்றும் செத்துப்போன மிருகங்களின் உடல்களும் மிதந்து வரும் சாக்கடையை புனித ஆறாகக் கருதி எந்தவித சலனமும் இல்லாமல் உள்ளே இறங்கி தொழில் தர்மத்தைக் காக்க துன்பத்தை நாளும் அனுபவிக்கும் அவனும் மனிதன்தானே. அசுத்த நீரில் தலை நனைந்து, வாய், காது, மூக்கு வழியாக நீர் நுழைய சாக்கடைப் புழுவைப் போலத் துடித்து சமூகத்தின் சுத்தத்தைக் காக்க தன்னையே அர்ப்பணிக்கும்போது அவர்களுக்கு நேரும் துன்பங்கள் தொடந்து கொண்டுதான் இருக்கின்றது.
அப்படி ஒரு துயர சம்பவம் தான் தொழிலாளர் தினத்தன்று திருவள்ளுர் மாவட்டத்தில் நிகழிந்துள்ளது.அதை பற்றிய செய்தி தொகுப்பை நாம் அறிந்துகொள்வோம்.
மிஞ்சூர் அருகே தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக விஷவாயுவு தாக்கி இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் இம்மானுவேல் மெட்ரிகுலேஷன் பள்ளி.நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் இருவரை வரவழைக்கப்பட்டனர் .
முதலில் சுப்பராயலு என்ற துப்புரவு தொழிலாளர் கழிவு நீர் தொட்டியில் இறங்கினர், நீண்ட நேரம் ஆகியும் சுப்பராயலு வெளிய வராததால் ,அவரை தொடர்ந்து அவருடன் வந்த துப்புரவு தொழிலாளர் கோவிந்தன் என்பவரும் உள்ளெ இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளிய வராததால் சந்தேகம் அடைந்த கழிவு நீரை ஏற்றிச்செல்வதற்காக வந்த வாகன ஓட்டுநர் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கழிவு நீர் தொட்டியில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த துப்புரவு தொழிலாளர் சுப்பராயலு மற்றும் கோவிந்தன் இருவரையும் சடலமாக மிட்டனர்.
இருவரது சடலங்களை மீட்டபோது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்களை பள்ளியின் தாளாளர் சைமன் விக்டர் கழிவு நீர் தொட்டியில் இறக்கியது தெரியவந்தது.
மேலும் போலீசார் பள்ளியின் தாளாளர் சைமன் விக்டர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.தொழிலார் தினத்தன்று இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.