கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் போலீஸ் எஸ்.ஐ-யின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் பியூலா. இவர் பணியாற்றி வரும் பள்ளியில் 50 மாணவ, மாணவியர்கள் கல்வி கற்று வந்தனர். இந்நிலையில் பட்டியல் இன பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதியில் இருந்து 11 மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றுவிட்டனர்.

தலைமையாசிரியை வைத்த கோரிக்கையை ஏற்று பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் திடீர் நகர் பகுதிக்கு நேரடியாகச் சென்று பழங்குடி மாணவர்களின் கல்வி எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் கல்வி குறித்து முழு விழிப்புணர்வை ஏற்படுத்தி மீண்டும் பள்ளிக்கு வர வைத்து இறுதித்தேர்வை எழுத உதவி புரிந்துள்ளார் .
காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் ஏற்படுத்திய விழிப்புணர்வு மாணவ, மாணவியர்களின் கல்வி எதிர்காலத்திற்குப் பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. இதனால் தற்போது இடையில் கல்வியை நிறுத்திய மாணவ, மாணவியர்கள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது.
காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமசிவன் மேற்கொண்ட நூதன விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள் எனப் பெற்றோர்களிடத்தில் ‘உங்கள் காலில் கூட விழுகிறேன்’ என உணர்ச்சிமிக்க வார்த்தைகளால் பேசிய பரமசிவத்தின் விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் காவலரை பாராட்டி பதிவிட்டுள்ளார்.