திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனன் லட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இந்த நிலையில் இவருடைய மகள் பிரகதீஷ்வரி 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவர் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த டிராக்டர் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி மின்கம்பம் உடைந்து மின்கம்பி குளத்தில் அறுந்து விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளார். குளத்தில் குளிக்கச் சென்ற தனது மகள் வெகு நேரமாகியும் வரவில்லை என நினைத்து பெற்றோர்கள் குளத்திற்கு சென்று பார்த்த பொழுது மாணவி உயிரிழந்து குளத்தில் மிதந்துள்ளார். இதனை கண்டு பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வந்து மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்த பிறகு உடலை மீட்டனர்.

இது சம்பந்தமாக ஆலிவலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கல்லூரி மாணவி பிரகதீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி உருவாகப் போகிறார் என்ற சந்தோசத்தில் இருந்த தாய், தந்தையருக்கு தனது மகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அவர்களை மட்டுமல்லாமல் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.