- சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்தூரில் பழமைவாய்ந்த அலர்மேலு மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.இக்கோவிலில் புரட்டாசி 2வது வார திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சார்பில் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க 21 வகையிலான சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் அக்னி ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்க கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கும் மாலை மாற்றியும், பூ பந்து உருட்டியும், திரு நாண் கயிற்றை கட்டி வைத்து கெட்டி மேளம் முழங்க திருக்கல்யாண வைபோக வைபோகத்தை வெகு விமரிசையாக நடத்தினர். இந்த நிகழ்வின் போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டது விண்ணை பிளந்தது. திருக்கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாப்பிள்ளை கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும் மணப்பெண்கள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கும் பட்டாச்சாரியார்கள் மஹா தீபாராதனை செய்வித்து பக்தர்களுக்கு திருக்கல்யாண தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.இவ்விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்தனர்.
ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது. பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரியதாக பார்க்கப்படுகின்றது. புதன் பகவான், அதி தேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும். தனின் வீடு கன்னி ராசியாகவும், அது பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார். அதனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற்சவம் செய்யப்படுகிறது. சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிக விஷேசமாகப் பார்க்கப்படுகின்றது.