- இலங்கை அதிபரின் போக்கில் மாற்றம் இருக்காது நெடுமாறன் பேட்டி. இந்தியாவின் எதிர்ப்பாளரான இலங்கை அதிபரின் போக்கில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை என்றார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் சார்பில் நடைபெற்ற கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய விலங்கை உடைத்து நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினேன் இலங்கையின் புதிய குடியரசுத் தலைவராக திசநாயக பொறுப்பேற்றுள்ளார்.
அவர் சார்ந்த ஜெ.வி.பி. இயக்கம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரான இயக்கமாக கடந்த காலத்தில் திகழ்ந்தது. இப்போது அவர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே இடதுசாரியாக அறியப்பட்ட அவர் சீனாவின் தீவிரமான ஆதரவாளர் இந்தியாவின் எதிர்பாளர். இந்தச் சூழ்நிலையில் அவரது போக்கில் மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை.
சீனாவின் பக்கம் மாலத்தீவு சாய்ந்தபோது, இந்தியா அத்தீவின் பாதுகாப்புக்காக நிறுத்திய படைகளை வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு வற்புறுத்தியது. இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் மூலமாகத்தான் அந்நாட்டுக்கு பெரும் வருவாய் கிடைக்கிறது. இதனால் மாலத்தீவுக்கு இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் செல்வதற்கு இந்திய அரசு மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டது. அதன் காரணமாக மாலத்தீவு பணிந்தது.
அதேபோல, இலங்கையின் வருமானத்தில் பெரும் பகுதி கொழும்பு துறைமுகத்தின் மூலமாகவே கிடைக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து சரக்கு பெட்டகங்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் செலவழிக்கிறோம். ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கன்னியாகுமரியிலுள்ள குளச்சல் துறைமுகம் சேர்க்கப்பட்டது. அப்போது, நேருவை சிறீமாவோ பண்டாரநாயக சந்தித்து எங்களது வருமானம் பாதிக்கும் எனக் கூறியதால், அத்திட்டம் நிறுத்தப்பட்டது. குளச்சல் துறைமுகத் திட்டத்தை இந்திய அரசு மீண்டும் கையில் எடுத்து நிறைவேற்றினால், மாலத் தீவை பணிய வைத்ததுபோல இலங்கையையும் பணிய வைக்க முடியும். இல்லாவிட்டால் பின்னாளில் வரப்போகிற பல அபாயங்களுக்கு வழிவகுத்தாகிவிடும் என்றார்.