- வங்கக்கடலில் இருந்து சென்னை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதா? சென்னைக்கு நாளையும் ரெட் அலர்ட் ஏன்? என்பது பற்றி தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி விட்டது. இதற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தான் காரணம். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை காலையில் கரையை கடக்க உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் சென்னையில் கனமழை பெய்தது. இன்று சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மழை இல்லை. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில் தான் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளைக்கும் ‛ரெட்அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இன்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். அப்போது அவர், ‛‛வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 280 கிமீட்டர் தொலைவில் உள்ளது. 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும். இதனால் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/30-cm-in-one-day-rain-that-threatened-the-suburbs-of-chennai-more-than-the-normal-of-the-previous-year-at-the-beginning-of-monsoon/
இந்த வேளையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாலச்சந்திரன், ‛‛காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிலக்கவில்லை. கடலில் இருந்து கரைக்கு அருகே வரும்போது கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ‛ரெட் அலர்ட்’என்பது விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் 20 செமீட்டர் அளவுக்கு மழை பதிவாகும் என்பது கிடையாது. சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யலாம். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை” என்றார்.