டெல்லி: மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதத்தில் இன்று எய்ம்ஸ் மருத்துவனைக் குறித்து காரசார விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்றைய தினம் காங்கிரஸில் ராகுல் காந்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து உரையாற்றினார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து இரு தரப்பிற்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடுதலாக மொத்தம் 900 படுக்கைகள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தமிழ்நாடு
அரசுக்குக் கடன் சுமையே இல்லை.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2022 முதல் படித்து வருகின்றனர். கடன் வாங்கி கட்டுகிறோமா இல்லை நிதி ஒதுக்குகிறோமா என்பது எங்கள் விருப்பம். அது எங்களுடைய கொள்கை சார்ந்த முடிவு. தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஆக தமிழக அரசே காரணம். எனவே, மதுரை எய்மஸ் கட்டுமான தாமதத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலைப் பரப்ப வேண்டாம். பொதுவாக 700 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன; ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன.
இவை தொற்று நோய் பரவல் ஏற்படும் போது பெரியளவில் உதவியாக இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 99 மாணவர்கள் இப்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள்” என்றார். அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். குறிப்பா நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசுகையில் திமுக எம்பிக்கள் வெட்கம்! வெட்கம்! எப்போது? எப்போது? என முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு குறித்துப் பேச நிறைய இருக்கிறது. நான் சொல்கிறேன் டிவியில் சென்று பாருங்கள்” என்று ஆக்ரோஷமாகப் பதில் அளித்தார். மதுரை எய்ம்ஸ் மட்டுமின்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவான பதிலை அளித்தார்.