- ரஷ்யாவில் தற்போது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னர் இருவரும் சந்தித்திருந்தாலும், இருதரப்பு உறவு குறித்து சமீபத்தில் பேசிக்கொண்டது கிடையாது. ஜி ஜின்பிங் கடைசியாக மகாபலிபுரம் வந்திருந்தபோது இருவரும் கலந்துரையாடினர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு என்பது கடந்த 2014ம் ஆண்டிலிருந்து மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது. இதற்கு அரசியல் காரணம் மிக முக்கியமானதாகும். அதாவது சீனாவில் கம்யூனிச கொள்கையை உயர்த்தி பிடிக்கும் ஜி ஜின்பிங் அதிபராக இருக்கிறார். இந்தியாவில் வலதுசாரி கொள்கைகளை உயர்த்தி பிடிக்கும் நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். கொள்கை ரீதியில் இது இரண்டும் நேர் எதிர் துருவம். எனவேதான் மோதல் முற்றியிருக்கிறது.
குறிப்பாக 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம், இரு நாடுகளின் உறவு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைச் சர்வதேச அளவில் பகிரங்கப்படுத்தியது. எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே, எல்லையை மீறியதாக இந்தியா மீது சீனா குற்றம்சாட்டியது. இதனால் ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாகவும், சீனா தரப்பில் 40 வீரர்கள் வரை உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதனையடுத்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது வந்தது. பிரிக்ஸ் மாநாட்டில் மோடி, ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து உரையாட உள்ள நிலையில், இந்த மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என, இரு நாட்டு ராணுவம் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து நேற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இரு நாட்டு வீரர்களும் வழக்கமான ரோந்து பாதையில் ரோந்து பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனையடுத்து இன்று மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்தித்து உரையாடுகின்றனர். இதற்கு முன்னர் கடந்த 2022ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்டனர். அதேபோல கடந்த அண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் இருவரும் சந்தித்துக்கொண்டனர். ஆனால், இருதரப்பு உறவு குறித்த எந்த உரையாடலும் இந்த சந்திப்புகளின் போது மேற்கொள்ளப்படவில்லை.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/weavers-are-protesting-to-sell-silk-cloth-to-the-tune-of-43-crore-rupees-and-to-give-bonus/
கடந்த 2019ம் ஆண்டு மகாபலிபுரம் வந்திருந்த ஜி ஜின்பிங், மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து பேசியிருந்தார். இந்த உரையாடல் நடந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இன்று ரஷ்யாவில் இருதரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது. எனவே, இதனை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.