13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அறை இறுதியில் தமிழ்நாடு அணி நடப்பு சாம்பியன் ஹரியானாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஹரியானா அணியில் அபிஷேக் 41 வது நிமிடத்திலும், தமிழக அணியில் சோமன்னா அறுபதாவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இதைத்தொடர்ந்து முடிவை அறிய கடைப்பிடிக்கப்பட்ட பெனால்டி சூட் அவுட்டில் ஹரியானா 4-2 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெனால்டி சூட்டில் ஹரியானா வீரர்கள் சஞ்சய், ராஜந்த், அபிஷேக், ஜோகிந்தர் சிங் ஆகியோர் தங்கள் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தனர். யாஷ்தீப்பின் கோல் அடிக்கும் முயற்சியை தமிழக கோல் கீப்பர் செந்தமிழ் அரசு தடுத்து நிறுத்தினார்.
தமிழகம் தரப்பில் கனகராஜ் செல்வராஜ், எஸ்.கார்த்தி ஆகியோரின் வாய்ப்பை ஹரியானா கோல் கீப்பர் பவன் முறியடித்து ஹீரோவாக மின்னினார். இதன் பின்னர் மாரீஸ்வரன் சக்திவேல், சுந்தரபாண்டி ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோல் ஆகியும் பலன் இல்லாமல் போனது.

மற்றொரு அரை இறுதியில் பஞ்சாப் அணி 5-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை சாய்த்து இறுதிப் போட்டியை எட்டியது. பஞ்சாப் அணியில் ஷாம்ஷெர் சிங் ( 4 – வது நிமிடம் ) சுஜித் சிங் ( 13 – வது நிமிடம் ) ஆகாஷ் தீப் சிங் ( 45 – வது நிமிடம் ) தலா ஒரு கோலும், ஹர்மன் பிரீத் சிங் ( 39 – வது மற்றும் 44 – வது நிமிடம் ) இரண்டு கோலும் அடித்தனர். கர்நாடகா தரப்பில் அப்ஹரன் சுதேவ் எட்டாவது நிமிடம் பதில் கோல் திருப்பினார்.
இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஹரியானா – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக பிற்பகல் 1:30 மணிக்கு நடக்கும் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதுகின்றன.