மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் – திமுக எம்.எல்.ஏ அமுலு விஜயன்

2 Min Read
சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன்

மக்கள் நல்வாழ்வு திட்டங்களால் பயன்பெற்று மாணவ-மாணவியர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இன்று குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வேலூர் கள விளம்பர அலுவலகம் சார்பில் குடியாத்தத்தில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய சட்டமன்ற உறுப்பினர், சோர்ந்து விடாமல் வாழ்க்கையில் தொடர் முயற்சிகள் மூலம் சவால்களை எதிர்கொண்டு இலட்சியங்களை எட்ட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியாத்தம் நகர்மன்ற உறுப்பினர் திரு.சௌந்தரராஜன், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து கனவு காண வேண்டும் என்றும், தங்களது நேரத்தை மென்மேலும் உயர, உயர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இளைஞர்களே நமது நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று கூறிய அவர் பல மேற்கத்திய நாடுகளில் நமது இளைஞர்கள் சாதனை படைத்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குனர் ஜெ.காமராஜ் பேசும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தே நலத் திட்டங்களை செயல்படுத்த இயலும் என்றார்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று கூறிய அவர், மகளிர் நலத்திட்டங்கள், கல்வி உதவித் திட்டங்கள், சுகாதாரத் திட்டங்கள், வங்கிக் கடன் திட்டங்கள் ஆகியவை மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் வாழ்க்கைக்கான இலக்குகளை எட்டும் முயற்சிகளை மாணவ-மாணவியர் கைவிடக் கூடாது என்றார்.

முன்னதாக புகைப்படக் கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றித் துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் சி.தண்டபாணி, அஞ்சலக கண்காணிப்பாளர் மாதேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் மத்திய மக்கள் தொடர்பக அலுவலர்கள் எஸ்.முரளி, எம்.ஜெயகணேஷ், அருண் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்

Share This Article
Leave a review