மண் அரிப்பு காரணமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல்.வீராணத்திலிருந்து ,சென்னைக்கு சும்மர் 20 ஆண்டுகளாக தண்ணீர் கொண்டு செல்லப்படும் குழாயின் பாலங்கள் பலவீனமடைந்துள்ளதால் குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்புகளை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகர மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் ஏரிகளில் ஒன்றாக வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியிலிருந்து சுமார் ரு.690 கோடியில் தண்ணீர் கொண்டு செல்ல குழாய்கள் அமைக்கப்பட்டு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 220 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
வினாடிக்கு அதிகபட்சமாக 76 கன அடி வரை இந்த குழாய் வழியாக கொண்டு செல்லலாம் 2004ம் ஆண்டு புதிய வீராணம் திட்ட செயல்பாட்டின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 20 ஆண்டுகளாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வரும் பங்கு வீராணம் ஏரிக்கு உண்டு.சென்னை மாநகர பகுதியில் ஒரு நாளைக்கு நபர் ஒன்றுக்கு 90லிட்டர் வீதம் 65 லட்சம் பேருக்கு நாள் ஒன்றுக்கு 910 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.

வீராணத்தில் தண்ணீர் வற்றிய போதும் அருகில் உள்ள வாலாஜா ஏரியிலிருந்து வீராணம் குழாய் வழியாக சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இக்குழாய்கள் மூலம் சுமார் 20 ஆண்டுகளாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்த குழாய்கள் புதைக்கப்பட்ட இடங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பூமியில் புதைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் இந்த வீராணம் குழாய்கள் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலை இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு அதன் மீது இந்த குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளை கடந்து செல்லும் வீராணம் குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் மண் அரிப்பு ஏற்ப்பட்டுள்ளதால் குழாய்கள் இடிந்து விழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
குறிப்பாக விழுப்புரம்,கடலூர் மாவட்ட எல்லையான கள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு அதன் மீது வீராணம் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் கொள்ளையால் பாலங்கள் கீழ் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தூண்கள் தெரியும் அளவிற்கு வந்துள்ளது.அதேபோல் சில தூண்கள் பலவீனம் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் வீராணம் குழாய் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னைக்கு குடிநீர் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணத்திற்கு கொண்டு செல்லப்படும் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் பலவீனம் ஏற்பட்ட இடங்களில் கண்டறிந்து அதனை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர மக்கள் மட்டுமின்றி, விழுப்புரம்,கடலூர் மாவட்ட மக்களும் வலியுறித்தியுள்ளனர்.