இலங்கையின் மலையக தமிழர்கள் விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளாதற்கு காரணம் ? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

4 Min Read

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

- Advertisement -
Ad imageAd image

02.11.2023 அன்று மலையக தமிழர்கள் விழா இலங்கையின் தலைநகரான கொழும்புவில் நடைபெற இருந்தது. மலையக தமிழர்கள் அங்கே தோட்டப்பணிகளிலே ஈடுபடுத்தப்பட்டு, வாழ்வியலை இலங்கையினுடைய மலை அடுக்குகளில் அவர்கள் வாழத் தொடங்கி அங்கு இருக்கக்கூடிய தோட்டங்களில் தங்களுடைய பணியினை, உழைப்பினை தங்கள் ரத்தம் வியர்வையை சிந்தி உழைத்த உழைப்பு. அது அங்கு துவங்கிய நாட்களை குறிக்கக்கூடிய வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முறையான அழைப்பு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்த நிகழ்வுக்கு கலந்து கொள்ள இயலாத நிலையில் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டு அரசின் பிரதிநிதியாக என்னை அந்த விழாவிலே கலந்து கொள்ளுமாறு அவர்கள் பணித்திருந்தார்கள்.

அதனையடுத்து நடக்கின்ற விழாவிலே நான் கலந்து கொள்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யக் கூடிய வகையில், நான் வருவதற்கான அந்த ஆயத்த பணிகளை இலங்கையிலே மேற்கொள்வதற்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பதிலாக நான் அங்கே வருகிறேன் என்பதை அங்கே இருக்கக்கூடிய விழா ஏற்பாட்டாளர்களுக்கு நாங்கள் தெரிவித்திருந்தோம். மிக முக்கியமாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையில் இருந்து அவ்வாறு இலங்கை பயணம் மேற்கொள்வதற்கான உரிய அனுமதியினை பெறுவதற்கு கடந்த 28ஆம் தேதி உரிய வழிமுறைப்படி விண்ணப்பம் நம்முடைய பொதுத்துறையால் அனுப்பப்பட்டு விட்டது. இதனிடையே விழா ஏற்பாட்டாளரும், நானும் தொடர்பு கொண்டு, என்னுடைய பயண விவரங்களை எல்லாம் அவர்களுக்கு அளித்து பயணத்திற்கு வேண்டிய தேவை மற்றும் விமான பயணச்சீட்டு எல்லாம் ஏற்பாடுகளை செய்துவிட்டு, வெளி விவகாரத் துறையின் அனுமதி கிடைப்பதற்கு காத்துக் கொண்டிருந்தேன்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

கடந்த 28 ஆம் தேதி தமிழக அரசின் பொதுத்துறையின் சார்பாக ஒன்றிய அரசின் வெளி விவகாரத்துறைக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இவ்விழா 2-ந் தேதி மதியம் ஆனால் 1- ஆம் தேதி இரவு 9.30 மணி வரை அதற்கான அனுமதி, ஒன்றிய அரசின் வெளி விவகாரத் துறையிலிருந்து நமக்கு வரவில்லை. அன்றைய தினம் நான் ஏறத்தாழ சுமார் 8.30 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருந்தேன். அங்கே இருக்கக்கூடிய அதிகாரிகளிடத்திலே ஒப்புதல் வந்துவிட்டதா என்று விசாரிக்கின்ற பொழுது அதுவரை வரவில்லை. மறுநாள் காலை விமானத்தில் நான் கொழும்பு செல்வதற்கு பயணத்திட்டங்களை ஏற்பாடு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் முதல் நாள் இரவு எட்டு முப்பது மணி வரை நான் தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற வரை ஒப்புதல் வரவில்லை. அதற்குப் பிறகு நாங்கள் அதிகாரிகளிடத்திலேயே கேட்டு இத்தகைய அனுமதி இனிமேலும் வருவது கடினம் என்ற சூழ்நிலையில், அதற்குப் பிறகு நான் அங்கு இருக்கக்கூடிய விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து சூழ்நிலையை அவர்களிடத்திலே விளக்கி, இந்த அனுமதி ஒன்றிய அரசிடமிருந்து வராத காரணத்தினால் நான் பயணத்தை மேற்கொள்ள இயலாது என்ற நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி விட்டு, என்னுடைய பயண ஏற்பாடுகளை நான் ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன்.

அதற்கு பிறகு சுமார் 09.30 மணியளவில் அந்த அனுமதி வந்திருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னதாகவே நான் இந்த பயண ஏற்பாடுகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு விழா ஏற்பாட்டாளர்களிடமும் தெரிவித்து பயணத்தை ரத்து செய்துவிட்டோம். ஆனால் மறு நாள் காலை சுமார் 11 மணியளவில் இலங்கையிலிருந்து முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இதுபோல தமிழ்நாட்டினுடைய அமைச்சர் அவர்களும் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதால் முதலமைச்சர் அவர்கள் ஒரு வாழ்த்து செய்தினை அனுப்பிட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அந்த செய்தி கிடைக்கப்பட்ட உடனடியாகவே முதலமைச்சர் அவர்கள், பல்வேறு அலுவல்;கள், ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்ட பணிகள் இருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் உடைய முக்கியத்துவத்தை கருதி உடனடியாக அவர்கள் நேரம் ஒதுக்கி அதற்கான வாழ்த்து செய்தியை உடனடியாக தயார் செய்து, அங்கே அவர்கள் அனுப்பி வைத்து விட்டார்கள்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

அந்த வாழ்த்து செய்தி இங்கிருந்து சுமார் 2 மணிக்குள்ளாகவே அவர்களுக்கு கிடைத்து விட்டது. அவர்கள் நம்மிடத்திலேயே முதலமைச்சர் உடைய வாழ்த்து செய்தி அங்கே வாசிக்கப்படும் அதாவது அங்கே ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, அங்கு இருக்கக்கூடிய செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ அன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அந்த வாழ்த்து செய்தி அந்த கூட்டத்திலே அவர்கள் ஒளிபரப்ப படவில்லை. அங்கே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அளவிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் அங்கே பங்கேற்று இருக்கிறார்கள். ஆனால் என்ன காரணத்தினால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்து செய்தியை அங்கே ஒளிபரப்ப இயலவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அதற்குப் பிறகு முதலமைச்சர் அவகளுடைய வாழ்த்து செய்தி பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியே வந்திருக்கின்றது. இந்த விஷயத்தில் இதுதான் இதுவரை நடைபெற்று இருக்கின்றது என்பதை இந்த சந்திப்பின் மூலமாக நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என தெரிவித்தார்.

Share This Article
Leave a review