போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பிரச்சனைகளை அரசு உடனே தீர்க்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிகிறார்கள். இத்தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், காலாவதியான பேருந்து இருந்தாலும், அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு அயராது பாடுபடுகிறார்கள். இத்துறையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு தீபாவளியோ, பொங்கலோ, கிறிஸ்மஸ் விழாவோ, ரம்ஜான் விழாவோ, என எந்த ஒரு விழாவும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியதில்லை. முக்கியமான திருவிழா நாட்களில் பேருந்துகளில் பொது மக்களுக்காக சேவை புரிகிறார்கள். மேலும் தொழிலாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக அவர்களுடைய விடுப்புகள் வைத்திருந்தும், விடுப்புகள் கொடுப்பதில்லை, சேவை மனப்பான்மையுடன் செயல்படக்கூடிய மாநகர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 20 வருடங்களுக்கு முன் வழித்தடத்தில் போடப்பட்ட பேருந்துகளை இயக்கும் நேரம் நிர்ணயித்தார்கள்.
அதன்பின் போக்குவரத்து நெரிசல் அடிப்படையில் நேரத்தை மாற்றாமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இவ்வாறெல்லாம் உழைக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்துவார்கள். ஆனால் திமுக அரசு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்றிவிட்டது. நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து (31.8.2023) , நான்கு மாதம் ஆனபிறகும் பேச்சு வார்த்தை இன்னும் துவங்கப்படவில்லை, ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட சரத்துக்கள் பல நிறைவேற்றப்படுவதில்லை, பல கிளைகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள், அதிகாரிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கை அதிகமாகவுள்ளது. ஒரு பக்கம் வேலைப்பளு, மறுபக்கம் நிர்வாகிகளின் அச்சுறுத்தல், மற்றொருபுறம் அதிகாரிகளின் அச்சுறுத்தல், இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இத்துறையில் அதிகம் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு super tax கட்டி சிறப்பான வரலாறு உண்டு.

கடந்த 20 ஆண்டுகளாக அதிகாரிகளின் மெத்தன போக்காலும், ஆளும் கட்சி நிர்வாகிகளின் அராஜகத்தாலும், பல இலவசத் திட்டங்களாலும், இத்துறை 50 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு, நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால் தொழிலாளர்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை, பொது சேவையில் ஈடுபடக்கூடிய இந்தத் துறையை, அரசு துறையாக பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை, அரசு பணியாளர்களாக நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பதே நியாயமாகும்.
அரசுகளாலும், அதிகாரிகளாலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளாலும் இத்துறையில் இழப்பு ஏற்படுவதை தொழிலாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். உடனடியாக அரசு தீவிர கவனம் செலுத்தி தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. இத்துறையில் 30 ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெறும்போது, அவர் அவர்களுக்கான பணப் பலன்களை உடனே கொடுப்பதில்லை, ஆண்டு கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது, 2015 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கான 04 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை, 2015 க்கு பின் ஓய்வு பெற்றவர்கள் ரூபாய் 25 ஆயிரம் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அதற்கு முன் ஓய்வு பெற்றவர்கள் பத்தாயிரம் முதல் 13 ஆயிரம் வரை ஓய்வு ஊதியம் பெறுகிறார்கள்.
90 ஆயிரம் பேர் ஓய்வு பெற்ற தொழிலாளர்களில் எட்டு ஆண்டுகள் DA உயர்த்தப்படாமல் சுமார் 10 ஆயிரம் தொழிலாளிகள் உயிரிழந்து விட்டார்கள் . மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும், பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுககும் மருத்துவ காப்பீட்டு திட்டம் பல மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லை, வயதான காலத்தில் தாய், தந்தைகளை மருத்துவம் பார்க்கும் வசதியும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவம் செய்யும் வகையில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்கப்பட வேண்டும். காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். வாரிசுதாரர்களுக்கு உடனே வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். இன்னும் இத்துறையில் தொழிலாளர்கள் ஓய்வு அறைகளில் சுத்தம் இல்லாமலும், கழிவறைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததாலும், குளியல் அறைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததாலும், பல பணிமனைகள் இடிந்து விழும் சூழல் உள்ளதாலும், இதையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக தொழிலாளர்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் . எனவே 15ஆவது ஊதிய உயர்வை உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி இத்துறையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை மன நிம்மதியோடு பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.