நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் இதன் பெயரை பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சரும், சங்கத்தின் துணைத்தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய நிர்வாக சபையின் தலைவர் திரு நிருபேந்திர மிஸ்ரா, இந்த அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பிரதமரின் அருங்காட்சியகம், ஜனநாயகத்திற்கான தேசத்தின் ஆழ்ந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும், அதன் புதிய வடிவம் நிறுவனத்தின் பெயரில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சரும், சங்கத்தின் துணைத்தலைவருமான திரு ராஜ்நாத் சிங் தமது உரையில், பெயர் மாற்ற ஆலோசனையை வரவேற்றார். புதிய வடிவிலான இந்த நிறுவனம் திரு ஜவஹர்லால் நேரு தொடங்கி திரு நரேந்திர மோடி வரையிலான அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளையும், அவர்களால் எதிர்கொள்ளப்பட்ட பல்வேறு சவால்களுக்கு அவர்களின் தீர்வுகளையும், காட்சிப்படுத்துவதாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர்களை ஒரு நிறுவனமாக வர்ணித்த திரு ராஜ்நாத் சிங், பல்வேறு பிரதமர்களின் பலவகையான பயணங்களை ஒரு வானவில்லின் பல்வேறு வண்ணங்களுடன் ஒப்பிட்டார். வானவில்லை மேலும் அழகாக்க அனைத்து வண்ணங்களும் சரியான விகிதத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்தினார். நமது முந்தைய பிரதமர்கள் அனைவருக்கும் மதிப்பளிப்பதற்கும், ஜனநாயக உள்ளடக்கத்திற்கும் புதிய பெயர் சூட்டும் தீர்மானம் உள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் அனைத்து பிரதமர்களுக்கும் அர்ப்பணிக்கும் வகையில் புதுதில்லியில் உள்ள தீன் மூர்த்தி வளாகத்தில் அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற யோசனையைப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதனை அடிப்படையில் கட்டப்பட்ட பிரதமர்களின் அருங்காட்சியகம் 2022, ஏப்ரல் 21 அன்று பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.